வெள்ளி, 8 செப்டம்பர், 2023

பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்களின் பணி மாறுதல் கலந்தாய்வில் கடும் அதிருப்தி

   தமிழகம் முழுவதிலும் உள்ள அரசுப் பள்ளிகளில் எட்டுத் துறைகளில் பகுதி நேர ஆசிரியர்கள் 2012ம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகின்றனர்.

  பணி நிரந்தரத்தை வலியுறுத்தி கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக பல கட்டப் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

  கடந்த ஆட்சியில் நியமன ஊதியம் 5000லிருந்து முறையே பல இடைவெளிகளில் 7000, 7,700 மற்றும் இறுதியில் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு 10,000 என்ற அளவில் மட்டுமே ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.

  இது கடை நிலை ஊழியரின் ஊதியத்தை விட மிக மிகக் குறைவானதாகும்.

  நடைபெறும் திமுக ஆட்சியில் தேர்தல் வாக்குறுதியில் பணிநிலைப்பு இடம்பெற்றிருந்தும், இரண்டரை வருடங்கள் கடந்தும் துளி அளவும் முன்னேற்றம் இல்லை.

  விலைவாசி பல மடங்கு உயர்ந்து விட்ட போதிலும், சிறு ஊதிய உயர்வு கூட வழங்கப்படவில்லை.

  பல போராட்டங்களுக்குப் பிறகும், நிதி சம்பந்தமில்லாத ஓய்வு வயது 58-60 உயர்வு, சாதாரணமாக வழங்கப்படக்கூடிய பணி மாறுதல் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

  அதிலும் பல காலிப் பணியிடங்கள் காட்டப்படவில்லை. இதனால் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

  இதில் தற்போது நடைபெற்று வரும் உடற்கல்வி ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலுமே திருப்தி அற்ற முறையில் கூடுதல் பணியிடங்கள் காட்டப்படவில்லை.

  எதையும் கண்டுகொள்ளாத அரசு மற்றும் அரசு அதிகாரிகளின் இந்த அலட்சியப் போக்கு கண்டிக்கத்தக்கது.

  பகுதி நேர ஆசிரியர்கள் இனத்தைத் தவிர மற்ற அனைத்துத் துறைகளுக்குமே ஏதோ ஒரு நன்மை நடந்தேறி உள்ளது.

  மிகக் குறைந்த ஊதியத்தில் கடும் சிரமத்தில் வாடி வரும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு, அரசு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

 அரசிடம் ஒவ்வொரு முறை முறையிடும்பொழுதும் நிதிநிலைமை சீரான உடன் படிப்படியாக வழங்கப்படும் என்ற ஒரே வாசகம் மட்டுமே பதிலாக வழங்கப்படுகிறது.

  இதனால், 12,500 பகுதி நேர ஆசிரியர்களும், அவர்களது குடும்பங்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

  எனவே, சென்னை பள்ளிக் கல்வித் துறை வளாகத்தில் வரும் 2023 செப்டம்பர் 25ல் மாநிலம் தழுவிய மாபெரும் போராட்டம் அறிவித்துள்ளனர்.

 பொன். சங்கர் 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக